×

மார்பக புற்றுநோய்க்கான ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தபோது நோயாளி கண்விழித்து பாட்டு பாடி அசத்தினார்: மருத்துவ உலகில் இதுவே முதல் முறை; அப்போலா மருத்துவர்கள் தகவல்

சென்னை: தன் நுரையீரலுக்குள் புற்றுநோய் விரிவாக பரவியிருந்த போதிலும் கூட, தனது மனக்கலக்கத்தையும், பயத்தையும் புறம்தள்ளி மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெறும்போது ஒரு நோயாளி, விழித்திருந்ததோடு, பாடலும் பாடிக்கொண்டிருந்த நிகழ்வு உலகில் இதுவே முதல்முறை என்று அறுவை சிகிச்சை செய்த அப்போலோ புரோட்டீன் கேன்சர் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். கர்நாடக சங்கீத பாடகியாகவும் மற்றும் ஆசிரியராகவும் இருக்கும் சென்னையைச் சேர்ந்த சீதாலட்சுமிக்கு முதிர்ச்சியடைந்த மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் உள்ள மார்பக புற்றுநோய் சிகிச்சைத் துறையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காகவும், பயத்தைக் குறைப்பதற்காகவும் மருத்துவர்கள் இசைப்பாடலை ஒலிக்கச் செய்தனர். பயம் குறைந்து அவர் சாந்தமாக இருந்த போது எபிடூரல் கதீட்டர் உட்செலுத்தப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அவர் அழைத்து வரப்பட்டார். இது நடைபெற்ற நேரம் முழுவதிலும் மனதை சாந்தப்படுத்துகின்ற மெல்லிய இசை பின்புலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. “வார்த்தைகள் தவறும் போது இசை பேசும் என்ற பொன்மொழி இந்த சூழலுக்குப் மிகப்பொருத்தமானதாகும். அறுவை சிகிச்சை நடைபெறும் போது படிப்படியாக அதன் தாக்கம் குறையத் தொடங்கியது. அறுவை சிகிச்சை பாதிநிலையை எட்டிய போது, அவர் விழிப்பு நிலைக்கு வந்தார். அதன்பிறகு அவரது அறுவைசிகிச்சை மருத்துவரிடமும், மயக்கவியல் மருத்துவரிடமும் இயல்பாக பேசத் தொடங்கினார். அறுவை சிகிச்சை அரங்கில் உற்சாகமான, மகிழ்ச்சியான சூழலே நிலவியது” என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். ஒரு பாட்டு பாடுமாறு கேட்டுக் கொண்டபோது, நோயாளி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியும், வியப்பும் அளிக்கும் வகையில், ஒரு பாட்டை பாடினார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு  ரெக்கவரி வார்டுக்கு மாற்றப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது அவர் உண்மையிலேயே இசைப்பாடலை பாடினார் என்ற தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போது உண்மையிலேயே அவர் வியப்பில் ஆழ்ந்தார். இரவு முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவர், அடுத்தநாள் பகலில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மார்பக புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுளா ராவ் கூறுகையில்: சீதாலட்சுமி, அறுவை சிகிச்சையினால் பாதிப்பிலிருந்து மீண்டு வந்திருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. உடலில் தென்படும் எந்தவொரு புதிய அறிகுறிகள் பற்றி ஆண்களும், பெண்களும் கவனமாக இருப்பதும், கூடிய விரைவில் அவர்களது மருத்துவர்களிடம் அவை பற்றி தெரிவிப்பதும் இன்றியமையாதது. வலியில்லாத கட்டி வீக்கம் என்பதே மார்பக புற்றுநோயின் மிகப்பொதுவான அறிகுறியாக இருக்கிறது. இப்புற்றுநோய் நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவுவதற்கு முன்னதாக சிகிச்சையளிக்கப்பட்டால், முழுமையாக சரிசெய்வதற்கான வாய்ப்புகள் 99% வரை உயரும் என்றார்.அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மயக்கவியல் துறை நிபுணர் டாக்டர் இந்துமதி கூறியதாவது: அறுவைசிகிச்சைக்கு முன்பு விரிவான கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை, நோயாளியின் தேவைகளை அக்கறையோடு கேட்பது, சிகிச்சை செயல்முறை காலம் முழுவதிலும் அவரை சௌகரியமாக உணரச் செய்வது மற்றும் இதற்கும் கூடுதலாக மிகச்சிறப்பாக செய்யப்பட்ட எபிடூரல் பிளாக் என்ற சிகிச்சை செயல்முறை என்பதும் இந்த நிகழ்வில் மிக முக்கிய அம்சங்களாகும். பின்னர் நோயாளி சீதாலட்சுமி கூறுகையில்; சாஸ்த்ரிய கர்நாடக சங்கீத பாடகியான நான், இசை ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறேன். இளையராஜாவின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அறுவைசிகிச்சை அரங்கிற்குள் நாங்கள் நுழைகிறபோது, இசைப்பாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இதுவே அறுவை சிகிச்சையின்போது நான் பாடுமாறு செய்திருக்கிறது. இவ்வாறு கூறினார்….

The post மார்பக புற்றுநோய்க்கான ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தபோது நோயாளி கண்விழித்து பாட்டு பாடி அசத்தினார்: மருத்துவ உலகில் இதுவே முதல் முறை; அப்போலா மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Apola Physicians Information ,Chennai ,Apola Doctors Information ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...