×

தொற்று ஏற்பட்டால் 3ல் ஒருவர் இறப்பார் என்று நியோகோவ் வைரஸ் பற்றிய செய்திகள் பெரிதுபடுத்தப்படுகிறது: பொதுமக்களிடம் பயம், பதற்றத்தை ஏற்படுத்த கூடாது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சீனாவில் நியோகோவ் என்கிற வைரஸ் வவ்வாலால் ஏற்படுகிறது, இந்த வைரஸ்  ஏற்பட்டால் 3 பேரில் ஒருவர் இறந்து விடுவார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு வருகின்றன. இச்செய்திகளை உலக சுகாதார நிறுவனம் இன்றும் உறுதி செய்யவில்லை, அவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இச்செய்திகளை வெளியிட வேண்டும், ஏனென்றால் பொதுமக்களிடம் பயத்தையும், பதற்றத்தையும்  ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகம் முழுவதும் 20-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதார துறை இணை இயக்குநர் வினய், துணை இயக்குநர் பரணி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் ஊராட்சி பகுதிகளில் நடைபெறக்கூடிய தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்கிறோம். தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 39 லட்சத்து 87,902 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் 97 லட்சம் பேர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையே இலக்காகக் கொண்டு வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இப்போது ஏற்படக்கூடிய 95 சதவீத உயிரிழப்புகள் கூட தடுப்பூசி செலுத்தாதவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தான், தடுப்பூசி ஒன்றுதான் நம்மைக் காக்கக்கூடிய ஒன்று எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் இதுவரை 47 லட்சத்து 9 ஆயிரத்து 066 பேர் முதல் முறையாக பயன் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் 39 லட்சத்து 4 ஆயிரத்து 894 பேருக்கு மருந்துப் பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தில் 609 மருத்துவமனைகள் மூலம் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தினால் 60 முதல் 70 என்கிற அளவில் ஏற்பட்ட இறப்புகள் பாதிக்கும் மேல் குறைந்திருக்கிறது.  இத்திட்டத்தினால் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காக்கப்பட்டிருக்கிறது. இப்போது சீனாவில் நியோகோவ் என்கிற வைரஸ் வவ்வாலால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் ஏற்பட்டால் 3 பேரில் ஒருவர் இறந்து விடுவார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரிதுப்படுத்தப்பட்டு வருகின்றன. இச்செய்திகளை உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இச்செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் பொதுமக்களிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இவற்றிக்கெல்லாம் ஒரே வழி தடுப்பூசி ஒன்று தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post தொற்று ஏற்பட்டால் 3ல் ஒருவர் இறப்பார் என்று நியோகோவ் வைரஸ் பற்றிய செய்திகள் பெரிதுபடுத்தப்படுகிறது: பொதுமக்களிடம் பயம், பதற்றத்தை ஏற்படுத்த கூடாது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,China ,Dinakaran ,
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...