- திமுக
- பாஜக
- அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு காட்டம்
- சென்னை
- சேகர்பாபு
- சி.எம்.டி.ஏ
- லஸ் நிழலை
- சென்னை, மயிலாப்பூர்...
சென்னை: மற்ற இயக்கத்தை போல் துள்ளி வந்து பின்புற வாசல் வழியாக பாஜவோடு கள்ள உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள லஸ் நிழற்சாலையில் சிஎம்டிஏ சார்பில் ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: சென்னை நகரத்தில் பெறப்படக்கூடிய வருவாய் இந்த மாநகரத்தில் உள்ள குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக 182 திட்டப்பணிகள் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டு அரங்கள், பூங்காக்கள், சமுதாய நலக்கூடங்கள், நூலகங்கள், படைப்பகங்கள் என பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
அனைத்து பணிகளும் 2026 ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 2021ம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலைஞர் நினைவு நாளை ஒட்டி கூட்டம் வந்ததால் நிதியமைச்சரை அந்த கூட்டத்தில் பங்கேற்க செய்கிறோம் எனக் கூறியபோது அவர் தேவை இல்லை என மறுத்ததால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு அடுத்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தின் போது வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற்கொண்டதால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக காரணத்தைச் சொல்லி அந்த கூட்டத்தை மறுத்தது உண்மை தான்.
முதல்வர் இந்தாண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிரதமரை சந்தித்த போது, தமிழகத்திற்கு மறுக்கப்படுகின்ற தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வித் தொகையை திரும்ப பெற வேண்டும் என தான் வலியுறுத்தினார். மற்ற இயக்கத்தை போல் துள்ளி வந்து பின்புற வாசல் வழியாக பாஜவோடு கள்ள உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் இன்று பதில் சொல்ல தயாராகவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார், செயற்பொறியாளர் விஜயகுமாரி, மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மற்ற இயக்கத்தை போல் துள்ளி வந்து பின்புற வாசல் வழியாக பாஜவோடு கள்ள உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம் appeared first on Dinakaran.
