×

வால்பாறையில் 2 தினங்களாக கனமழை

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் பிற்பகல் முதல் கனமழை நீடித்து வருகிறது. வால்பாறை பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் வால்பாறை வட்டார பகுதியில் நேற்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியார் நகர், சோலையார் அணை, வில்லோனி, அட்டகட்டி, வாட்டர் பால்ஸ் உள்ளிட்ட பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. மழையும் காற்றும் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. வில்லோனி, பெரியார் நகர், சோலையார் நகர், உருளிக்கல் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காலை முதல் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய ஊழியர்கள் கொட்டும் மழையில் போர்க்கால அடிப்படையிலே பணியாற்றி, கம்பங்களில் ஏறியும், உடைந்த கம்பங்களை விட்டு மாற்றுப்பாதையில் மின் விநியோகம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

மின் விநியோகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் செல்போன் சேவையும் பாதிப்படைந்து உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமதுரை, தாசில்தார் மோகன்பாபு, நகராட்சி ஆணையாளர் ரகுராம் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் அருவி, நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள ஆறு மற்றும் நீர் வீழ்ச்சிகளில் பொதுமக்கள் இறங்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறை பகுதியில் பிற்பகல் முதல் நீடித்து வரும் கனமழை இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய செய்துள்ளது. தேயிலைத்தோட்டங்கள் மூடு பனியால் மூடப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடங்களில் முடங்கி உள்ளனர். நேற்று அதிகாலை நிலவரப்படி சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 137 மிமீ மழை பதிவாகியுள்ளது. கீழ்நீராறு 95, சோலையார் அணை 73, வால்பாறை 54 மிமீ மழை பதிவாகி உள்ளது.

The post வால்பாறையில் 2 தினங்களாக கனமழை appeared first on Dinakaran.

Tags : Valparai ,Valparai, Coimbatore district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது