×

சித்தளி கிராமத்தில் கோயில் திருவிழா; 1,000 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்: 30 கிராம மக்கள் பங்கேற்பு

குன்னம்: சித்தளி கிராமத்தில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு 1000 ஆடுகளை பலியிட்டு விருந்து வைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தில் அய்யனார் கோயில், கரைமேல் அழகர் கோயில், நல்லதாய் அம்மன் கோயில், புலி முகத்து கருப்பையா கோயில் மற்றும் பெரியாண்டவர் பெரியநாயகி அம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை குலதெய்வமாக கொண்ட 15 மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்காக உறவினர்களுடன் சித்தளி கிராமத்திற்கு வந்து நூதன முறையில் திருவிழா நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த குடிபாட்டு மக்கள் தங்கள் உறவினர்களுடன் ஏராளமான வாகனங்களில் வந்து சித்தளி கிராமத்தில் வீடுகள், தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து தங்கினர். ஒரு வாரம் தங்கி இருக்கும் இவர்கள் இங்குள்ள கோயில்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜைகளை செய்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அய்யனார் மற்றும் கரைமேல் அழகர் கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து நல்ல தாய் அம்மன் கோயிலில் காலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

பத்திற்கும் மேற்பட்ட பூசாரிகள் வரிசையில் ஆடுகளை பலி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நல்லதாய் அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு, பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் தங்கி உள்ள கூடாரத்திற்கு எடுத்துச் சென்று, சமைத்து உற்றார், உறவினர்கள், கிராம மக்களுக்கு விருந்து கொடுத்தனர். தொடர்ந்து இன்று புலி முகத்து கருப்பையாவிற்கும் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

நாளை பெரியாண்டவர் மற்றும் பெரியநாயகி அம்மனை வழிபடுகின்றனர். கடைசி நாளான நாளை மறுநாள் சுவாமி வீதியுலா நடைபெறுகிது. அதனை தொடர்ந்து வாண வேடிக்கை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
தமிழகத்திலேயே இந்த ஊரில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குடிபாட்டு மக்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நாளில் ஒன்று கூடி உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்து, நேர்த்திக்கடனை செலுத்தும் நூதன வழிபாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சித்தளி கிராமத்தில் கோயில் திருவிழா; 1,000 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்: 30 கிராம மக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Temple festival ,Chithali village ,Kunnam ,Pongal festival ,Perambalur district ,Ayyanar temple ,Karaimel Alaghar temple ,Nallathai Amman… ,festival ,
× RELATED கைக்குழந்தையால் படிப்பை பாதியில்...