×

தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம் – மக்களைத் தேடி மருத்துவம். தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (20.05.2025) அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் ‘நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ குறித்த தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் ஆற்றிய உரை வருமாறு;

2004-ஆம் ஆண்டு நிகழ்வுற்ற ஒரு மிகப்பெரிய சாலை விபத்தில் கால்மூட்டு நான்கு ஐந்து துண்டுகளாக உடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையென மூன்று மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய ஒரு எதிர்பாராத சூழ்நிலை எனக்கு நேரிட்டது. நிலைகுலைந்த அத்தகைய ஓர் சூழலில் இனிமேல் தொடர்ந்து தரையில் உட்காரவோ, நடக்கவோ அல்லது ஓடவோ கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரை ஒரு பேரிடியாக வந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடாது ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் படிப்படியாக யோகா பயிற்சி, மெதுவாக நடத்தல், சிறிய தூரங்கள் ஓடுதல் என முயற்சிக்கத் தொடங்கி ஓட்டப்பயிற்சி அளவிற்கு உயர்ந்து மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டேன். அதைத் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்று உலக சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றதோடு விடாமுயற்சி மற்றும் சளைக்காத மனவுறுதியுடன் இதுவரை 160 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வரும் 24.05.2025 அன்று 161-வது மாரத்தான் போட்டி அமெரிக்கா-காலிபோர்னியா மாகாணத்திலுள்ள சன்னிடேல் என்கின்ற இடத்தில் கலந்து கொள்ள உள்ளேன்.

மாராத்தான் நிதி மக்கள் பணிக்கு
தமிழ்நாடு அரசால் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்கள்’, 2022-ஆம் வருடம் நடைபெற்ற ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்’ மற்றும் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கின்னஸ் உலகசாதனை படைத்த ‘கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்’ ஆகியவற்றில் முன்னிலை வகுத்து பங்கேற்றதுடன், இந்நிகழ்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற பதிவுத்தொகையான ரூபாய் 5.43 கோடியை கொரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதி, எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்குவதர்க்கான 4 மாடி கொண்ட உறைவிட கட்டடம் மற்றும் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான உயர் சிகிச்சைக்கான கட்டடம் போன்ற பல்வேறு உயர் நோக்கங்களுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மக்களைத் தேடி மருத்துவம் – ஐநா விருது
மேலும், தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் எவ்வாறு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இந்திய அளவில் திகழ்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 05.08.2021-ல் தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்தும் திட்டம்’, ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2004-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award பெற்றுள்ளதையும், ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’, ‘இதயம் காப்போம் திட்டம்’, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும்-48’ போன்ற பிற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தன்னம்பிக்கை எத்தகைய பலம் வாய்ந்தது என்பதற்கு இலக்கணமாக மயிரிழையில் உயிர்தப்பி இனி முன்பு போல இயங்கவியலாது என்ற நிலையிலிருந்து மனவுறுதி, விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சி காரணமாக மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனைகள் புரிந்து இன்று சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும், வருங்காலத் தலைமுறையினருக்கும் தினசரி நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மூலம் உடல் மற்றும் மனநலம் காக்கப்படுவதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்வாய்ப்பாக இப்பயணம் அமைந்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றினார்கள்.

The post தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,Subramanian Pride ,Chennai ,Chief Minister ,Minister of Medicine and Public Welfare ,Subramanian ,Tamil ,Nadu ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...