×

7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் நெல்லை அரசு பள்ளிகளில் பயின்ற 10 பேருக்கு எம்பிபிஎஸ் இடம்

* கல்லணை பள்ளி மாணவிகள் 7 பேருக்கு வாய்ப்புநெல்லை : தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் ஒரே பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ பட்டப் படிப்பிற்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது. நீட் தேர்வு ரத்து மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் மருத்துவ பட்டப்படிப்பிற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மட்டுமே ஒரே வாய்ப்பாக கருதப்படுகிறது.தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் நடந்தது. நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்க நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 10 பேருக்கு நேற்றைய கலந்தாய்வின் மூலம் இடம் கிடைத்தது.நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 6 பேருக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. இந்த பள்ளியின் மாணவிகள் ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய மூவருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், இதே பள்ளி மாணவி காயத்ரிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், செளந்தர்யாவிற்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்  கல்லூரியிலும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது. இவர்கள் 5 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்த நிலையில், இதே பள்ளி மாணவி கிருத்திகாவுக்கு கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது மாணவிகள் மத்தியிலும், பள்ளியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7.5 சதவீதம் அரசு பள்ளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் மூலமே இந்த இடம் சாத்தியமாகியுள்ளது என நெல்லை மாவட்ட நீட் தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பானுப்பிரியாவிற்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் உதயசெல்வம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், இதே பள்ளி மாணவி திவ்யாவிற்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், இதே பள்ளி மாணவி விஷ்ணு பிரியாவிற்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்தது. இடம் கிடைத்துள்ள 10 பேரில் உதய செல்வம் மட்டுமே மாணவர். மற்ற 9 பேரும் மாணவிகள்.ஒரு மாணவிக்கு பிடிஎஸ்-ல் இடம்நெல்லை கல்லணை அரசு பள்ளி மாணவிகள் 6 பேருக்கு எம்பிபிஎஸ் இடம் கிடைத்த நிலையில், இதே பள்ளி மாணவி அப்ரின் பாத்திமாவிற்கு பிடிஎஸ் படிப்பில் கோவை ஆர்விஎஸ் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இதன் மூலம் ஒரே பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் நெல்லை அரசு பள்ளிகளில் பயின்ற 10 பேருக்கு எம்பிபிஎஸ் இடம் appeared first on Dinakaran.

Tags : MPPS ,Tamil Nadu ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...