- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தலைமை நீதிபதி
- பி. ஆர் கவாய்
- நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மயேஷ்
- கபில் சிபல்
- அபிஷேக்…
- தின மலர்
புதுடெல்லி: வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதத்தில், வக்பு சொத்துகளை எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றாமல் கையகப்படுத்தும் வகையில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதில் வக்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளன. பழைய புராதான சின்னங்கள் வக்பு சொத்துகளாக இருந்து வருகிறது. ஆனால் அவை பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக அந்த இடங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும் விதமாக தற்போது இந்த புதிய சட்டம் வழிவகுக்கிறது என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அப்படியென்றால் தற்போதையை வக்பு திருத்த சட்டம் உங்களது உரிமையை பறிக்கிறது என்று நாங்கள் பதிவு செய்து கொள்ளலாமா? என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கபில் சிபல், அதனை தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் வக்பை உருவாக்க வேண்டும் என்றால் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு முழுமையாக எதிராக உள்ளது. அடுத்ததாக பழங்குடியினர் வக்பு சொத்துகளை கொடுக்க முடியாது என சொல்லப்படுகிறது. வக்பு நிர்வாகக் குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நியமனம் வாயிலாக உறுப்பினர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் வக்பு சொத்தை நிர்வகிக்கும் உரிமையும் இஸ்லாமியர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் வக்பு சொத்து விவகாரங்களில் ஒரு முடிவு எடுக்கிறார் என்றால், அதை நீதிமன்றத்தில் சென்று முறையிட வேண்டும். ஆனால் அந்த கால நேரத்திற்குள் புதிய சட்டத்தின் கீழ் வக்பு சொத்துக்கள் முழுமையாக அபகரிக்கப்பட்டிருக்கும். தற்போதைய வக்பு திருத்த சட்டத்தில் அரசியல் சாசனத்தின் பல விதிகள் மீறப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய வக்பு திருத்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3(டி) மற்றும் 3(ஈ) ஆகிய இரண்டும், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகதான் சேர்க்கப்பட்டது. அதுசார்ந்து எந்தவித விவாதமும் நடத்தப்படவில்லை. வரைவு மசோதாவிலும் அந்த பிரிவுகள் கிடையாது.
அதேப்போன்று நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாகவும் அது விவாதிக்கப்படவில்லை என்றார். அரைகுறையாக அவசர கதியில் இயற்றப்பட்ட புதிய வக்பு திருத்தசட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை இரண்டாவது நாளாக இன்றைக்கும் தொடர்கிறது. இதில் மீதமுள்ள மனுதாரர்கள் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.
The post வக்பு சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதம் appeared first on Dinakaran.