×

அபிஷேக் சர்மா அதிரடியில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த லக்னோ; அடுத்த சீசனில் நிச்சயம் எங்களை மெருகேற்றிக் கொண்டு வருவோம்: சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

லக்னோ: ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது. லக்னோ வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மிட்செல் மார்ஸ் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை 10.3 ஓவர்களில் சேர்த்தது. இந்த சூழலில் நிக்கோலஸ் பூரன் களத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரிஷப் பன்ட் பேட்டிங் செய்ய வந்தார். இந்த சீசன் முழுவதும் கடுமையாக தடுமாறி வந்த ரிஷப் பன்ட் இந்த போட்டியிலும் சொதப்பினார். 6 பந்துகளில் வெறும் 7 ரன்களை மட்டுமே சேர்த்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 27 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட ரிஷப் பன்ட் தடுமாறி வருவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து நிக்கோலஸ் பூரன் அபாரமாக ஆடி 26 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் லக்னோ 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் இஷான் மலிங்கா 2 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா தைடே மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். அதர்வா தாய்டே 9 பந்துகளில் 13 ரன் எடுத்து அவுட்டானார். இதையடுத்து இஷான்கிஷனுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டார். அவர் 18 பந்துகளில் அரை சதம் விளாசினார். குறிப்பாக ரவி பிஸ்னோயின் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 7.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 59 ரன்கள் சேர்த்தார். இசான் கிஷன் 35, ஹென்றிச் கிளாசன் 47, கமின்டு மெண்டிஸ் 32 ரன்கள் எடுக்க 18.2 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் லக்னோ அணி பிளே ஆப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், ‘‘நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். எனினும் எங்கள் பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக அபிஷேக் சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இஷான் மலிங்காவின் பந்துவீச்சை இத்தருணத்தில் பாராட்டியே ஆக வேண்டும். எங்கள் அணியின் பொக்கிஷம் அவர். இந்த வெற்றியில் மலிங்காவின் பங்களிப்பு அதிகம். கடந்த கால தோல்வியில் இருந்து நிறையவே கற்றுக் கொண்டோம். இன்னும் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது. அடுத்த சீசனில் நிச்சயம் எங்களை மெருகேற்றிக் கொண்டு வருவோம்’’ என்றார்.

The post அபிஷேக் சர்மா அதிரடியில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த லக்னோ; அடுத்த சீசனில் நிச்சயம் எங்களை மெருகேற்றிக் கொண்டு வருவோம்: சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Abhishek Sharma ,Sunrisers ,Cummins ,IPL 2025 ,Vajpayee Cricket Stadium ,Mitchell Mars… ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...