×

காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 2024ல் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024ம் ஆண்டு கொலை உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் காவல்துறை ேமற்கொண்ட பல்வேறு முன்ெனச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டில் கொலை, காயம், கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. கொலைகளின் நீண்டகால போக்கின் பகுப்பாய்வின்படி 2017 முதல் 2020ம் ஆண்டு வைர கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019ம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும் 2021 மற்றும் அதற்கு பிறகு கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

2024ம் ஆண்டில் மிக குறைவாக கொலை வழக்குகள் (1,563) பதிவாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 161 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தாலும், இது 2024ம் ஆண்டில் மாத சராசரியுடன் ஒப்பிடும் போது கொலை வழக்குகள் 130 ஆக குறைந்துள்ளன. இது மேலும் 2025ம் ஆண்டு (ஏப்ரல்) வரை மாதத்திற்கு 120 கொலை வழக்குகள் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 6 ஆண்டுகளில் மிக குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2014ம் ஆண்டில் ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன. 2025ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக முந்தைய ஆண்டின் (2024) முதல் 4 மாதங்களில் 501 கொலைகளுடன் ஒப்பிடும் போது, 483 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பழிக்குப்பழியாக 35 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். அது 2022ம் ஆண்டு இதே காலத்தில் 29 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். 2023ம் ஆண்டு 25 ரவுடிகள் கொலையும், 2024ம் ஆண்டு 22 ரவுடிகளின் கொலையும், 2025ம் ஆண்டு 18 ரவுடிகள் கொலைகளாக குறைந்துள்ளது. முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை தகவல்களை பகிர்ந்து கொண்டதால் கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு காலத்தில் திட்டமிட்ட குற்றப்புலனாய்வு பிரிவால் 4,460 உயிருக்கு எதிரான அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இதன் விளைவாக 326 கொலைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

2024ம் ஆண்டு 3,645 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021ம் ஆண்டுக்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 2019ம் ஆண்டு 1,929 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 1,325 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது செயல்பாட்டின் அடிப்படையில் சரித்திர பதிவேடு ரவுடிகளை மறு வகைப்படுத்திய பிறகு ஏ பிளஸ் கேட்டகிரி மற்றும் ஏ கேட்டகிரியின் கீழ் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பழிக்குப்பழி கொலை தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
பழிவாங்கும் மற்றும் ரவுடிகள் தொடர்பான கொலைகளை தடுக்கவும், சிறைக்குள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பெறவும், சிறைச்சாலைகளில் ரவுடிகளை உன்னிப்பாக கண்காணிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைக்குள் ரவுடிகள் மற்றும் பழிவாங்கும் கொலைகளை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. ரவுடிகள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் பழிக்குப்பழி மற்றம் ரவுடி கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனை தந்துள்ளது என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

The post காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 2024ல் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police ,DGP ,Shankar Jiwal ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது