சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் அந்தமான் கடல் பகுதியில் ஒரு வளி மண்டல சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 20ம் தேதி வரை படிப்படியாக மழை அதிகரித்து பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை மேலும் நீடித்து படிப்படியாக மழை 20ம் தேதி வரை அதிகரித்து பெய்யும் வாய்ப்புள்ளது. இருப்பினும் சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று, அதிகபட்சமாக கரூர், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. தஞ்சாவூர், சேலம் 102 டிகிரி, சென்னை 100 டிகிரி, அதிராமபட்டினம், கோவை, பாம்பன், திருப்பத்தூர் 99 டிகிரி வெயில் நிலவியது.
The post படிப்படியாக மழை அதிகரிக்கும் appeared first on Dinakaran.