சென்னை: வழக்கறிஞர்கள் பெயரில் தன்னை சிலர் மிரட்டுவதாக நடிகை கவுதமி பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். நடிகை கவுதமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னிடம் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துகளை அபகரித்து கொண்டனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் மீது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நீலாங்கரையில் ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துள்ளனர். இந்த 2 வழக்குகளும் தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக மாநகராட்சியில் அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டும், மின்சார இணைப்பு பெற்று பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அளித்த புகாரின் படி சென்னை மாநகராட்சி அந்த இடத்தை பூட்டி சீல்வைத்தனர். அந்த இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க தன்னிடம் சிலர் ரூ.96 ஆயிரம் பணம் கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு தன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட சிலர், தன்னை வழக்கறஞர்கள் என்று கூறி மிரட்டுகின்றனர்.
வரும் 15ம் தேதி நீலாங்கரை காவல் நிலையம் முன்பு ‘சட்டம் உதவி சங்கம்’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே தனக்கு வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலம் அளித்த புகாரில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் காவல்துறை அதிகாரிகள் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
The post வழக்கறிஞர்கள் பெயரில் சிலர் மிரட்டுகின்றனர் நடிகை கவுதமி பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.