- Kodanadu
- Pollachchi
- தலைமை அரசு எம். கே
- ஊட்டி
- முதல் அமைச்சர்
- மீ.
- கோதாநாடு
- கே. ஸ்டாலின்
- 127 வது மலர் கண்காட்சி
- அரச தாவரவியல் பூங்கா
- ஊட்டி, நீலகிரி மாவட்டம்
- எல். ஏ கே. ஸ்டாலின்
ஊட்டி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டது போல் கொடநாடு கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கும் 127வது மலர் கண்காட்சியை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி ஊட்டிக்கு சென்றார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கியுள்ள அவர் நேற்று முன்தினம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கு யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து, பாகன்களுக்காக கட்டப்பட்டுள்ள மாவூத் குடியிருப்புகளை திறந்து வைத்தார். வனத்துறை அதிகாரிகளுக்கு புதிய வாகனங்களை வழங்கி, ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர், ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை நேரில் பாராட்டினார். நேற்று காலை 7 மணி அளவில் அவர் தமிழ்நாடு மாளிகையில் இருந்து தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்துக்கு கார் மூலம் வந்தார். தொடர்ந்து, அங்குள்ள சிந்தடிக் ஓடுதளத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு அவர் பயிற்சியில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறுவர்களுடன் கலந்துரையாடினார். குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினார். மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் கோடைகால பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறுவர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதே பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நான் திட்டவட்டமாக உறுதி அளித்திருந்தேன். யார் எந்த பதவியில் இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தேன். இதுகுறித்து நான் சட்டமன்றத்திலும் ஏற்கனவே பேசி இருந்தேன். அதற்கு ஏற்றாற்போல் தற்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை கிடைத்துள்ளது. இதேபோல் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும்.
எடப்பாடி பழனிசாமி எல்லாமே நான்தான் என பேசி வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், மெட்ரோ திட்டத்திற்கு நிதி கிடைத்ததற்கு நான்தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி ‘அம்பக்’ பொய் பித்தலாட்டம் பேசி வருவது அவரது வேலையாக உள்ளது. அவர் எதற்காக அமித்ஷாவை சந்தித்தார் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு முதல்வர் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5.30 மணி அளவில் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்கு சென்றார். அங்கு தொலைநோக்கி மூலம் இயற்கை அழகை கண்டு ரசித்தார். இன்று காலை 10 மணிக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த கண்காட்சி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
* திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை மேம்பட்டுள்ளது
‘அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யாரென்று தேடவேண்டிய நிலை இருந்தது. திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை மேம்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்ளவும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
* பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 13ம் தேதி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தவழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கப்படும்.
* செல்லூர் ராஜூ ஒரு அரசியல் கோமாளி
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘ராணுவ வீரர்களை அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு அரசியல் கோமாளி. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் சிறந்த முறையில் செயல்பட்டது. இந்திய ராணுவமும் சிறப்பாக பணியாற்றியது. அதற்காகத்தான் நான் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தினேன்’என்றார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கை போல கொடநாடு கொலை வழக்கிலும் உரிய தண்டனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.