×

சிறுமலை மலைச்சாலையில் மாயமாகும் குவி கண்ணாடிகள்: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

திண்டுக்கல்: சிறுமலை மலைச்சாலை வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ள குவி கண்ணாடிகள் திருடு போவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக முக்கிய சுற்றுலாத் தலமாக சிறுமலை திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீ உயரத்தில் உள்ள இப்பகுதி, சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது திண்டுக்கல்லிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு இயற்கை அழகை கண்டு களிக்க வருகின்றனர்.

இந்த மலைச்சாலையில் அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக குவி கண்ணாடிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் 4க்கும் மேற்பட்ட வளைவுகளில் இருந்த குவி கண்ணாடிகளை சமூக விரோதிகள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் வளைவுகளில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 6வது கொண்டை ஊசி வளைவில் சாலையோரத் தடுப்புச்சுவர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.

கடந்த மாதம் இப்பகுதியில் சுற்றுலா வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே இப்பகுதியில் சாலையோர தடுப்புச்சுவரை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘‘குவி கண்ணாடிகளை திருடியவர்களை கைது செய்ய வேண்டும். அப்பகுதிகளில் மீண்டும் குவி கண்ணாடிகளை பொருத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறாவது கொண்டை ஊசி வளைவில் விபத்தை தவிர்க்கும் வகையில் தாழ்வாக உள்ள சாலையோர தடுப்புச்சுவரை உயர்த்த வேண்டும்’’ என்றனர்.

The post சிறுமலை மலைச்சாலையில் மாயமாகும் குவி கண்ணாடிகள்: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Nurumalai ,Dindigul ,Nirumalai ,Shirumala ,Godaikanal ,Nurumalai Mountain ,Dinakaran ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6...