×

திருவையாறு அருகே முன்பட்ட குறுவை நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்

 சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது
 பல கிராமங்களில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது

தஞ்சாவூர், மே 14: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த அம்மையகரம் பகுதியில் முன் பட்ட குறுவை நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.மேலும், தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முன் பட்ட குறுவை சாகுபடி நடைபெறுவதும் வழக்கம். அதன்படி திருவையாறு அருகே உள்ள அம்மையகரம் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன் பட்ட குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மற்றும் வெண்ணாறு கரையோர கிராமங்களில் மின்சார மோட்டார் வசதி உள்ள விவசாயிகள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் முன்பட்ட குறுவை சாகுபடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவையாறு தாலுகா பகுதியில் பல கிராமங்களில் நடவு பணிகள் முடிவடைந்து உள்ளது. வழக்கமாக மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடி செய்தால் பருவ மழை மற்றும் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கும் நிலை உருவாகி விடுகிறது. மே மாதத்தில் நடவு செய்தால் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு அறுவடை செய்யலாம் என்ற எண்ணத்தில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்ய விரும்புகிறார்கள்.

தற்போது திருவையாறு பகுதியில் முன்பட்ட குறு வை நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவையாறு வேளாண்மை வட்டாரத்தில் நடைபெற்று வரும் நடவு நாற்று பறித்தல் பணிகளுக்கு வெளி மாவட்ட தொழிலாளர்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் குழுவாக வரும் ஆண்கள், பெண்கள் நடவு, நாற்று பறித்தல் பணிகளை செய்கின்றனர். காலையில் வரும் அவர்கள் மாலை வரை வேலை செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். இன்னும் 15 நாட்களுக்குள் அதாவது முன்னதாகவே திருவையாறு வட்டார பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது. அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், கண்டியூர், மேல திருப்பந்துருத்தி, நடுக்காவேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முன் பட்ட குறுவை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post திருவையாறு அருகே முன்பட்ட குறுவை நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru ,Thanjavur ,Ammaiyakaram ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது