புதுடெல்லி: இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி, அர்ஜென்டினாவில் நடைபெறும் 4 நாடுகள் மோதும் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. அதையொட்டி, வரும் 25ம் தேதி, அர்ஜென்டினாவில் 4 நாடுகள் கலந்து கொள்ளும் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், இந்தியா, அர்ஜென்டினா, உருகுவே, சிலி ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. வரும் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் சிலி நாட்டு மகளிர் அணியுடன் இந்திய வீராங்கனைகள் மோதவுள்ளனர்.
மறுநாள், இந்தியா – உருகுவே நாடுகள் இடையே ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 2ம் தேதி, அர்ஜென்டினா நாட்டு அணியுடன் இந்திய வீராங்கனைகள் மோதவுள்ளனர். இதுகுறித்து, ஹாக்கி இந்தியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில், அர்ஜென்டினாவில் நடைபெறும் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் துஷார் காண்ட்கர் கூறுகையில், ‘இந்தாண்டு நடைபெறும் ஜூனியர் ஹாக்கிப் போட்டிகளுக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்ப்பதற்கு மிகச் சிறந்த வீராங்கனைகளை தேர்ந்தெடுப்பதில் முனைப்புடன் உள்ளோம்’ என்றார்.
The post உலகக் கோப்பை ஹாக்கிக்கு முன்னோட்டம்: 4 நாடுகள் மோதும் போட்டிகளில் இந்திய மகளிர் அணி பங்கேற்பு; அர்ஜென்டினாவில் 25ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.