ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே பேண்டேஜ் தயாரிப்புக்கு கூலி உயர்வு கோரி, சிறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 35 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 1ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
ஆனால், விசைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கும், விசைத்தறிக்கூடங்களுக்கும் பேண்டேஜ் துணி தயாரித்து கொடுக்கும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்களுக்கு இன்னும் கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 700 சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் மருத்துவ துணி (பேண்டேஜ்) தயாரிப்பும், 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.
