×

சித்ரா பெளர்ணமியையொட்டி சென்னிமலை கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னிமலை, மே 13: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. அதன்பின், மாலை சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நேற்று காலை முதல் இரவு வரை கோயிலுக்கு சொந்தமான 2 பேருந்துகளும் மலைப்பாதையில் இயக்கப்பட்டது.

இதேபோல், சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு 49வது ஆண்டாக பக்தர்கள் திருப்பூர் மாவட்டம் மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர், தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு சாமிக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திரளான பக்தர்கள் நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து, நேற்று மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் சந்தன அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post சித்ரா பெளர்ணமியையொட்டி சென்னிமலை கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Chennimalai ,Chitra Pournami ,Subramaniaswamy ,Chennimalai, Erode district ,Gomatha Puja ,
× RELATED பாலஸ்தீன மக்கள் மீதான போரை நிறுத்த...