சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை யொட்டி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மேலும், பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்தும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்த அறிவிப்பில் ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரில் ஒரே தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, என் உயிருக்கும் உயிரான தொண்டர்கள், என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம், எளியோர்களுக்கான ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நல செயல்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் அதிமுக மருத்துவர் அணி சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை காணொலி காட்சி வாயிலாக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் ரத்ததான முகாமை நடத்தினர். அதேபோல், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.
