×

அரியலூர் அருகே பரபரப்பு கொள்ளிடம் ஆற்றில் திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்

அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் நேற்று திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆறு 43 கி.மீட்டர் நீலத்திற்கு தா.பழூர் வரை செல்கிறது. தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம்போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் ராமாநல்லூருக்கும், அழகிய மணவாளன் கிராமத்துக்கும் இடையே உள்ள ஆற்றுப்பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டதோடு திடீரென தரையிறங்கியது. இதை பார்த்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்ற நிலையில், திடீரென கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள நடுத்திட்டத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ஹெலிகாப்டர் இறங்கிய பகுதிக்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த விமானிகள், ஹெலிகாப்டர் இறங்கிய பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என எச்சரித்தனர். சில நிமிடத்திற்கு பின் அந்த ெஹலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அரியலூர் போலீசார் வந்து கூடியிருந்தவர்களிடம், தஞ்சாவூர் விமானப்படை பயிற்சி மையத்தின் ஹெலிகாப்டர், மாதத்திற்கு ஒருமுறை கொள்ளிடம் வந்து ஆற்றில் இறக்கி பயிற்சி எடுப்பார்கள். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை என்றனர். இதையடுத்தது பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

The post அரியலூர் அருகே பரபரப்பு கொள்ளிடம் ஆற்றில் திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் appeared first on Dinakaran.

Tags : Kollidam river ,Ariyalur ,Thirumanur ,Thapazhur ,Kollidam river… ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...