- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
- திருவாரூர்
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- மாவட்டம்
- ஜனாதிபதி
- முருகேசன்.…
திருவாரூர், மே 12: பெண் ஆசிரியர்களுக்கான மருத்துவ விடுப்பு நாட்களை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார்.
இதில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், செல்வமணி, மகளிர் வலையமைப்பு நிர்வாகிகள் பாலதிரிபுரசுந்தரி, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் சத்யநாராயணன் வரவேற்றார். இதில், பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என தெரிவித்தனர்.
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து காலியாக உள்ள தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் இத்தொகை பரிவர்த்தனை கட்டணங்களுக்கே தீர்ந்து விடுவதால் இத்தொகையினை நேரிடையாக பணமாக வழங்க வேண்டும்.
பள்ளிகளில் வழங்கப்படும் சீருடை, புத்தகம், குறிப்பேடு உள்ளிட்ட விலையில்லா பொருள்களை பள்ளிகள் திறப்பதற்கு முன்னரே வழங்கிட வேண்டும், ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், இந்த கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பணி மாறுதல் செய்திட வேண்டும். அதிகரித்து வரும் குடும்ப சுமை மற்றும் கற்பித்தல் பணிகள் காரணமாக ஏற்படும் நோய்களுக்கான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளும் வகையில் பெண் ஆசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பை அதிகரித்து வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சமன் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி நன்றி கூறினார்.
The post ஆசிரியர்களுக்கான மருத்துவ விடுப்பு நாட்களை அதிகரிக்க வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை appeared first on Dinakaran.