×

மயோனைஸ் தடை குறித்து விழிப்புணர்வு

காரிமங்கலம், மே 12: உணவு பாதுகாப்பு துறை சார்பில், காரிமங்கலம் ஒன்றியத்தில் மயோனைஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு கடந்த ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரிமங்கலம் டவுன் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கெரகோட அள்ளி, மொரப்பூர் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மயோனைஸ் விற்பனை செய்யும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள், பயன்படுத்தும் அசைவ உணவகங்கள், துரித உணவகங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் முறையாக சேமிக்கபடாமையால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் இறைப்பை, குடல் தொற்று மற்றும் உணவு நஞ்சாகுதல்(புட் பாய்சன்) போன்ற நோய்கள் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் எண் மற்றும் விபரங்கள் அச்சிடப்பட்ட, பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் மயோனஸ் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து உணவகங்கள், விற்பனை நிறுவனங்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.

The post மயோனைஸ் தடை குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Food Safety Department ,Tamil Nadu government ,
× RELATED ஓய்வூதியர் தின விழா