திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும் 11ம்தேதி நடைபெறுகிறது. அன்றிரவு 8.53 மணி முதல் 12ம்தேதி இரவு 10.48 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்று சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கான வசதிகளை முறையாக செய்துத்தர வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். அதன்படி, பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்ற பணிகள் மற்றும் 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்ததாவது: சித்ரா பவுர்ணமி முன்னிட்டு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பணியாளர்கள் 80 பேருக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரங்களில் பல்வேறு இடங்களில் நிழற்பந்தல், தரிசன வரிசை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
130 சிறப்பு பஸ்கள்;
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி, கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து வேலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அதிகாரிகள் கூறுகையில், ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 11ம் தேதி சித்ரா பவுர்ணமி முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில், வேலூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 40 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 30 சிறப்பு பஸ்கள் என 130 சிறப்பு பஸ்கள் வரும் 11ம்தேதி காலை முதலே இயக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த சிறப்பு பஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்’ என்றனர்.
The post நாளை மறுதினம் சித்ரா பவுர்ணமி; தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு: 130 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.
