×

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் ஆங்கிலத்திற்கு இணையான புதிய தமிழ் கலைச்சொற்கள்: கல்வியியல் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் ஆங்கில சொற்களுக்கு இணையான புதிய தமிழ் கலைச்சொற்கள் உருவாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ் வளர்ச்சி துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, ‘வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அனைத்து தளங்களிலும் தமிழ் பயன்பாட்டினை அதிகரிக்க செய்யும் வகையில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்களுக்கு இணையான புதிய தமிழ் கலைச்சொற்கள் உருவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்து துறைசார் வல்லுநர்களை கொண்ட குழுக்கள் அமைத்து, புதிய கலைச்சொல் அகராதிகள் உருவாக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணைக்கிணங்க 2025-26ம் நிதியாண்டிற்கு வேளாண்மை கலைச்சொல் அகராதி உருவாக்க திட்டமிடப்பட்டு, அதுதொடர்பான அலுவலர்சார் குழுவின் முதல் கூட்டம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் நடந்தது. அகரமுதலி இயக்கக இயக்குநர் பவானி வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குநர் புனிதவதி, தமிழ் பல்கலைக்கழக அகராதியியல் துறை தலைவர் ஜாக்குலின் நேரிலும், தமிழ்நாடு பாடநூல் (ம) கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன் இணையவழியிலும் கலந்துகொண்டு வேளாண்மை கலைச்சொல் அகராதியை செம்மையுற வெளிக்கொணர்வதற்கான கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் அகரமுதலி இயக்கக பதிப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

The post மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் ஆங்கிலத்திற்கு இணையான புதிய தமிழ் கலைச்சொற்கள்: கல்வியியல் அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Development Department ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...