×

கூடங்குளம் அணுமின், வடசென்னை அனல்மின் நிலையத்தில் இன்று சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை: அரசு அறிவிப்பு

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம், அலகு-2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் தலைமையில் கடந்த 6ம் தேதி மாநில மற்றும் ஒன்றிய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 7ம் தேதி மற்றும் நேற்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம், அலகு-2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் மாலை 4 மணியளவில் நடக்கிறது. இந்த பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் ஒத்திகை பயிற்சியை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே. மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post கூடங்குளம் அணுமின், வடசென்னை அனல்மின் நிலையத்தில் இன்று சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kudankulam Nuclear Power Plant ,North Chennai ,Thermal Power Plant ,Chennai ,Kudankulam ,Nuclear ,Power ,Plant ,North ,Chennai Thermal Power Plant ,Unit ,Atthipattu ,Tamil Nadu government ,Union Home Ministry ,North Chennai Thermal Power Plant ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை