×

சிவாஜி சிலை திறப்பு முதல்வருக்கு பிரபு நன்றி

சென்னை: திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அவருக்கு நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார். திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் பாலக்கரை பிரபாத் ரவுண்டானா பகுதியிலும், பின்னர் ஜங்ஷன் வார்ன்ஸ் சாலையிலும் அமைக்க திட்டமிட்டு சிலை கொண்டு வரப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை திறக்கப்பட்டாமல் இருந்தது. இந்நிலையில், திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் சிவாஜி சிலை நிறுவப்பட்டது. இதை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அங்கு முதல்வரை சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர்கள் மற்றும் சிவாஜி சிலை அமைப்பு குழுவினர் முன்னிலையில் சிவாஜி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அங்கிருந்த சிவாஜி புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிவாஜி சிலை அருகில் நின்று அமைச்சர்கள் மற்றும் சிவாஜி மகன் ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோருடன் குரூப் போட்டேர எடுத்துக்கொண்டார். இதுகுறித்து நடிகர் பிரபு நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இன்றைக்கு ரொம்பவும் சந்தோஷமான நாள். சிவாஜி இளமை பருவத்தில் திருச்சியில் தான் வளர்ந்தார். அவரது சிலை திருச்சியில் இருக்க வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் ஆசை. இன்று அந்த ஆசை நிறைவேறி உள்ளது. சிவாஜி சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு முழுமூச்சாக செயல்பட்ட அமைச்சர் நேருவுக்கும், மேயர் அன்பழகனுக்கும், சிவாஜி ரசிகர் மன்றத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

திருச்சி வாழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறு வயதில் திருச்சியில் அனைத்து பகுதிக்கும் மாட்டுவண்டியில் சிவாஜியுடன் சென்றோம். திருச்சி எங்கள் மனதிற்கு நெருங்கிய ஊர். என் தந்தை மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் முதல்வர். சிவாஜி சிலையை கலைஞர் திறந்து வைப்பதாக இருந்தது. சில காரணங்களால் அது நிறைவேறவில்லை. இன்று முதல்வர் சிவாஜி சிலையை திறந்து வைத்துள்ளார். முக்கியமாக, திருச்சிக்காரர் சிவாஜி, அவரது சிலை இங்கு அமைந்துள்ளதால் அவரது ஆத்மா சாந்தி அடையும்,’’ என்றார்.

 

The post சிவாஜி சிலை திறப்பு முதல்வருக்கு பிரபு நன்றி appeared first on Dinakaran.

Tags : Prabhu ,CM ,Shivaji ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Thilakam Sivaji Ganesan ,Trichy ,Sivaji Ganesan ,Palakkarai Prabhat Roundabout ,
× RELATED சென்னை சூளைமேடு பகுதியில் சிபிசிஐடி...