×

சென்னை விமான நிலையம், துறைமுகத்தில் பணியாற்றிய 273 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம்

சென்னை: சென்னை விமான நிலைய கார்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த 273 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், ஜிஎஸ்டி வரித்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பதவி உயர்வுடன் கடந்த ஏப்ரல் 21ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், சென்னை சுங்கத்துறையில் பணியாற்றி வந்த 273 அதிகாரிகள் அதிரடியாக ஒரே நேரத்தில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், 41 கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், 93 துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், 139 இன்ஸ்பெக்டர்கள், சூப்பிரண்ட்கள் என மொத்தம் 273 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றியோர், விமான நிலைய கார்கோ சுங்கப் பிரிவுக்கும், சென்னை துறைமுகம், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவு ஆகியவற்றில் இடமாற்றமும், அதேபோல், ஜிஎஸ்டி பிரிவில் உள்ளவர்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறை, விமான நிலைய கார்கோ பிரிவு மற்றும் சென்னை துறைமுகம் சுங்கத்துறை அலுவலகங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு மேலும் புதிதாக துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மிக முக்கிய பொறுப்புகளான, கடத்தல் தங்கத்தை கண்டுபிடித்து பிடிக்கக்கூடிய ஏர் இன்டலிஜென்ட், போதைப் பொருள் கடத்தலை கண்டுபிடிப்பது, வெளிநாடுகளில் இருந்து கொரியர் பார்சல்களில் போதை மாத்திரைகள் வருவதை கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர். சுங்கத்துறையில் ஒரே நேரத்தில் 273 அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, சென்னை விமான நிலையத்தில் மிக முக்கிய பொறுப்புகளான கடத்தல் தங்கத்தை பிடிக்கும் ஏர் இன்டலிஜென்ட், போதைப் பொருட்கள் கடத்தல் கண்டுபிடிப்பது போன்றவைகளில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமாக நடக்கும்’’ என்றனர்.

 

The post சென்னை விமான நிலையம், துறைமுகத்தில் பணியாற்றிய 273 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு பணியிடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Port ,Chennai ,Chennai Airport Cargo Division ,Srinivasa Nayak ,Principal Commissioner ,GST Tax Department… ,Customs ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...