×

கரையான் அரித்த ரூ.1 லட்சம் பணத்தை மாற்ற நடவடிக்கை: தொழிலாளி குடும்பம் நெகிழ்ச்சி

சிவகங்கை: தினகரன் செய்தி எதிரொலியாக தொழிலாளியின் கரையான் அரித்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கிளாதிரி கக்கனம்பட்டியை சேர்ந்த தம்பதி குமார்-முத்துக்கருப்பி. இவர்கள், ஓலை வேய்ந்த கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் கூலி வேலைக்கு சென்று கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து ரூ.500 நோட்டுகளாக மாற்றினர்.

பின்னர் ஒரு தகர உண்டியலில் வைத்து வீட்டினுள் குழி தோண்டி புதைத்து குழந்தைகளின் காதணி விழாவுக்காக சேமித்து வைத்திருந்தனர். ரூ.1 லட்சம் வரை இருந்த பணத்தை கரையான் அரித்ததால் ரூ.500 நோட்டுகள் முழுமையாக சேதமடைந்தது. கரையான் அழித்த நோட்டை வங்கியில் மாற்ற முடியாததால் முத்துக்கருப்பி குடும்பத்தினர் செய்வதறியாது தவித்தனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் (மே 7) தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதுகுறித்த தகவல் அறிந்த கலெக்டர் ஆஷாஅஜித் உடனடியாக சிவகங்கை தாசில்தார் சிவராமன் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் ஆகியோர், முத்துக்கருப்பியை சந்தித்து விசாரணை நடத்தினர். விதிமுறைகளின்படி கரையான் அரித்த நோட்டுகளுக்கு மதிப்பில்லை என்றாலும், கூலி வேலை செய்து சேமித்த பணம் சிதைந்ததால் கருணை அடிப்படையில் உதவியளிக்க பரிசீலனை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள ஆர்பிஐ தலைமையகத்தில் ரூபாய் நோட்டுகளை பரிசோதித்த பின் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கூலித்தொழிலாளி குமார் கூறியதாவது, ‘‘கூலி வேலைகள் செய்து உழைத்த பணத்தை சேமித்து வைத்திருந்தோம். குழந்தைகளின் காதணி விழாவிற்காக பணத்தை எடுத்தபோது ஒரு லட்ச ரூபாய் வரை உள்ள பணம் கரையான் அரித்து வீணாகி விட்டதால் மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தோம். மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறையின் ஏற்பாட்டில் முன்னோடி வங்கி மூலம் எங்களுக்கு பணம் கிடைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதற்காக கலெக்டர் வருவாய்த்துறையினர் வங்கி மேலாளர் ஆகியோருக்கு நன்றி’’ என்றார்.

The post கரையான் அரித்த ரூ.1 லட்சம் பணத்தை மாற்ற நடவடிக்கை: தொழிலாளி குடும்பம் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Dinakaran ,Kumar-Muthukaruppi ,Kalathiri Kakkanampatti ,Thiruppuvanam ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்