×

உயரழுத்த காற்று இணைய உள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள உயரழுத்த காற்றுகள் இணையும் வாய்ப்புள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை மற்றும் இரவு வேளையில் மழை கொட்டி தீர்த்துள்ளது. 8 மாவட்டங்களில் 50 மிமீக்கும் மேல் மழையும், சில இடங்களில் 100 மிமீ வரையும் மழை பெய்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி பயணித்த மழை மேகங்கள் சென்னையில் பெய்யாமல் சற்று மேற்கு புறத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. அதேபோல சிவகாசி, விருதுநகர், திருச்சி, மதுரையிலும் கனமழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இருப்பினும் இந்த மழை நீடிக்கும்.

குறிப்பாக நாளையில் இருந்து இந்த மழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். 10ம் தேதியில் இருந்து படிப்படியாகவும் 12ம் தேதியில் இருந்து மேலும் கூடுதலாகவும் மழை பெய்யத் தொடங்கும். 15ம் ேததியும் கனமழை பெய்யும். கோடை வெயில் தெரியாத அளவுக்கு மழை பெய்து குளிர்விக்க போகிறது. வேலூர் மற்றும் ஆந்திரா ஒட்டிய வட மாவட்டங்களில் சில இடங்களில் வெயில் இருக்கும். குறிப்பாக 104 டிகிரியை தாண்டி வெயில் செல்லாது. அதாவது 100 டிகிரிக்குள் தான் வெயில் இருக்கும். 100 டிகிரிக்கு மேல் ஓரிரு இடங்களில் இருக்கும். மற்ற மாவட்டங்களில் மழை பெய்வது உறுதி.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பிற்பகலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அதைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிகவகங்கை மாவட்டத்திலும் மழை பெய்யும். மதியம் 3 மணிக்கு மேல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த மழை பொழிவு திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் என்று நெருங்கி வந்து நள்ளிரவில் டெல்டா மாவட்டத்திலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

நாளை நிலவரப்படி கிழக்கு, மேற்கு காற்று இணைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். வட கடலோரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு நேரத்திலும், ஆந்திர எல்லையோர மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், அனைத்து உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.
9ம் தேதி மேலும் பரப்பில் அதிகரித்து மழை பெய்யும். 12ம் தேதி முதல் கனமழை பெய்யும். வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் உயரழுத்த காற்று நீடித்து, ஒருபுறம் நீராவி காற்றையும் குவிக்கும் போது மழை கனமழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

14, 15ம் தேதி முதல் கேரள எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்யும். அதிகாலை மாலை நேரங்களில் மழை பெய்யும். வங்கக் கடலோரமும் மழை இருக்கும். அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும். வெப்பச்சலன இடி மின்னல் மழை வங்கக் கடலோரத்தில் வரும்போதெல்லாம் மேற்கு மாவட்டங்களில் உறுதியாக மழை பெய்யும். நல்ல மழை பொழிவு 3வது வாரத்தில் இருந்து பெய்யும். அந்தமான் பகுதியில் 13ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், கேரளாவில் மே 30ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post உயரழுத்த காற்று இணைய உள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Arabian Sea ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...