×

சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆய்வு பக்தர்கள் வசதிக்காக 4,533 சிறப்பு பஸ்கள்: 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு:5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வருகிற 11ம் தேதி சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பக்தர்கள் வசதிக்காக 4,533 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 11ம் தேதி இரவு 8.53 மணிக்கு தொடங்கி, 12ம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இரண்டு நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, சித்ரா பவுர்ணமி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ மு.பெ.கிரி, எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம்பிரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது: சித்ரா பவுர்ணமிக்கு 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்துதர ஏற்பாடு செய்துள்ளோம். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அன்னதானம் தரமாக வழங்குவதை கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்தவும், 24 மணி நேரமும் போலீஸ் ரோந்துப் பணியை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்களை வழிமறித்து இடையூறு செய்யும் திருநங்கைகள் மற்றும் கோயில் திருப்பணி எனும் பெயரில் கட்டாய நன்கொடை வசூலிப்போர், பக்தர்கள் எனும் போர்வையில் சமூக விரோத குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்படும். நடைபாதையை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 14 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கப்படும். பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில், விபத்து நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்ைக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 4,533 சிறப்பு பஸ்கள் 9,342 நடைகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 5,195 போலீசார் ஈடுபடுகின்றனர். தடையில்லாத மின்சாரம், 20 தற்காலிக பஸ் நிலையங்களில் அடிப்படை வசதிகள், இணைப்பு பஸ்கள் இயக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* கோயிலில் எல்லோரும் சமமே சிறப்பு தரிசனம் அனுமதியில்லை

ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு தரிசனம் அனுமதி கிடையாது. கோயிலுக்குள் வேண்டியவர், வேண்டாதவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்ேலாரும் சமம் என்ற நிலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமமான முறையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் செயல்பட வேண்டும். உள்ளூர் பக்தர்களுக்கு, சிறப்பு அனுமதி பாஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

* சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்

9 முக்கிய சாலைகளில் 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள். 72 இடங்களில் கார் பார்க்கிங் வசதி.கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2.25 லட்சம் குடிநீர் பாட்டில். 1.25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் மற்றும் கடலை மிட்டாய். 10 ஆயிரம் லிட்டர் மோர். தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து, கிரிவலப்பாதைக்கு வர வசதியாக 165 இணைப்பு பஸ்கள்.

சித்ரா பவுர்ணமி நாட்களில் 27 தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் வழக்கம் போல இயங்கும். அதோடு, 8 சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு.அண்ணாமலையார் கோயிலில் 315 மற்றும் கிரிவலப்பாதையில் 344 உள்பட மொத்தம் 659 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு.53 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள். 32 இடங்களில் காவல் உதவி மையங்கள்.

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய, ‘ரிஸ்ட் பேண்ட்’ எனப்படும் கைகளில் அடையாள அட்டை கட்டப்படும்.1,800 தூய்மைப்பணியாளர்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர் தூய்மைப்பணி.115 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி. உணவின் தரத்தை கண்காணிக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகளை அமைச்சர் ஆய்வு பக்தர்கள் வசதிக்காக 4,533 சிறப்பு பஸ்கள்: 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு:5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chitra Pournami ,Tiruvannamalai ,E.V. Velu ,Chitra Pournami festival ,Annamalaiyar ,Chitra ,Pournami ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...