×

சிவகங்கை அருகே மாக மாரியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா: அம்மை நோயை விரட்டும் வினோத வழிபாட்டால் களைகட்டிய கிராமம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மகா மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அம்மை நோயை விரட்டும் வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் கட்டுக்குடிபட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்று கிழமை சித்திரை பொங்கல் விழா காப்பு காட்டுதலுடன் தொடங்கியது.

விழாவில் ஆண்களும், பெண்களும் முகத்தில் சாயத்தை பூசி கொண்டு எல்லையம்மாள், சின்ன கருப்பர் கோயில் முன்பு கும்மியடித்தும், பல்வேறு தெய்வங்களின் வேடம் தரித்தும் சாமியாடி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி பறை இசை முழங்க நடந்த பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் இளைஞர்களும், சிறுவர்களும் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பழங்கள், பச்சை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயில் முன்பு கோழி இறகு மீசையும், தலையில் கோழி இறகு கொண்ட கூடையையும் சுமந்தவாறு கையில் உலக்கையோடு வந்த பூசாரி கோயிலை சுற்றி சுற்றி வலம்வந்து அம்மை நோயை விரட்டும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பூசாரியை வேப்பிலையோடு சிறுவர்கள் விரட்டினர். இதன்மூலம் திருஷ்டி கழியும் என்றும் திருவிழா முடிந்ததும் மழை பொலிந்து விவசாயம் செழிக்கும் என்றும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post சிவகங்கை அருகே மாக மாரியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா: அம்மை நோயை விரட்டும் வினோத வழிபாட்டால் களைகட்டிய கிராமம்! appeared first on Dinakaran.

Tags : Maha Mariamman Chithirai Pongal festival ,Sivaganga ,Maha Mariamman temple ,Singampunari ,Sivaganga district ,Chithirai Pongal festival ,Kattukkudipatti ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...