×

உலகநாடுகள் முழுவதிலிருந்து திரளும் திருநங்கைகளுக்கு கூத்தாண்டவர் கோயிலில் நிரந்தர அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும்

விழுப்புரம், மே 6: உலகநாடுகள் முழுவதிலிருந்தும் திரளும் திருநங்கைகளுக்கான ஒரே கோயிலான கூத்தாண்டவர் கோயிலில் நிரந்தரமாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளன. விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருணா மற்றும் திருநங்கைகள் சுபிக்‌ஷா, விமலா ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு கடந்த 22 ஆண்டுகளாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, டெல்லி, மும்பை உள்ளடங்கிய திருநங்கைகள் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுயதொழில் முன்னேற்றம், அடிப்படை உரிமைகளுக்காக பணியாற்றி வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சி, மிஸ்கூவாகம் அழகி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி இந்த ஆண்டு 11ம் தேதி நகராட்சி திடலில் சென்னை திருநங்கை கூட்மைப்பு சார்பில் கலைநிகழ்ச்சிகளும், 12ம் தேதி மிஸ்கூவாகம் அழகி போட்டி காலையில் ஒரு பகுதியாகவும், இறுதிசுற்று நகராட்சி திடலில் அன்று மாலையும் நடைபெறுகிறது. அதேபோல் 13ம் தேதி கூவாகத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரைத்துறை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.

உலக நாடுகள் முழுவதிலுமிருந்தும் திருநங்கையர் திரளும் இந்நிகழ்ச்சிகளை 42 மாவட்டங்களை சேர்ந்த 84 தலைவிகள் ஒருங்கிணைப்பு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கூறி வருவதை போல் லாட்ஜ், தங்கும் விடுதி கட்டணம் இந்த ஆண்டும் 2 மடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தட்டிக்கேட்டால் ரூம் கிடையாது என்கின்றனர். நாடு முழுவதும் பல கோயில்கள் இருந்தாலும் லட்சக்கணக்கான திருநங்கைகளுக்கு இருக்கும் ஒரே கோயில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் மட்டும்தான். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை. கோயிலுக்கு இதுவரை பெயிண்ட் கூட அடிக்கவில்லை. தற்காலிகமாக கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். அங்கு நிரந்தரமாக செய்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு திருநங்கைகளுக்கான தனிக்கொள்கையை ஏற்படுத்த வேண்டும். ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளதை போன்று கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய தனி கொள்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post உலகநாடுகள் முழுவதிலிருந்து திரளும் திருநங்கைகளுக்கு கூத்தாண்டவர் கோயிலில் நிரந்தர அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Khothanavar Temple ,Viluppuram ,South Indian Transgender Federation ,Kothantawar Temple ,Coordinator ,Aruna ,Subiksha ,Vilupura ,Kothanawar Temple ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு