×

சங்கராபுரம் அருகே 2 கடைகளில் தீ விபத்து: ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்

 

சங்கராபுரம், மே 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இனிப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள டயர் கடைக்கும் தீ பரவி காட்டுத்தீ போல எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியாததால் அருகில் உள்ள கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் டயர் கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த 2 கடைகளிலும் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சங்கராபுரம் அருகே 2 கடைகளில் தீ விபத்து: ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Murugan ,Thiruvannamalai Road ,Devapandalam ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை