×

மாணவ, மாணவியர் நலன் கருதி பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்: பெற்றோர் கோரிக்கை

 

மதுரை, மே 5: மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களை ஆர்டிஓக்கள் முறையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 430க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் கடந்த மே 2ம் தேதியில் இருந்து முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதனையும் மீறி பைபாஸ் ரோடு, காளவாசல், கோச்சடை, 4 வழிச்சாலை பகுதியில் உள்ள சில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக மீண்டும் புகார் எழுந்துள்ளன. இதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமாக 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.

இந்த வாகனங்கள் மாவ,மாணவிகளை அழைத்து வர பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சரியான முறையில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களை கண்டறிந்து தகுதி இழப்பு செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் சார்பில் இயக்கப்படும் வாகனங்களை முறையாக ஆய்வு செய்து ஆர்டிஓக்கள் தகுதிச்சான்று வழங்க வேண்டும். கடந்த வருடத்தில் முறையாக ஆய்வு செய்யாமல் சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் துவரிமான் 4 வழிச்சாலையில் பள்ளி வாகனம் மோதியதில் போலீஸ்காரர் ஒருவர் உயிழந்தார். இதேபோல் சில பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் காயமடைந்தனர். இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க. பள்ளி வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர்.

The post மாணவ, மாணவியர் நலன் கருதி பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்: பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,RTOs ,Madurai district ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்