சென்னை: நீட் தேர்வு வந்தபோது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு போலீசார் செய்த கடைசி நேர உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கெடுபிடிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. திருமுருகன்பூண்டி பகுதியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு ஊத்துக்குளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவர் அணிந்து வந்த உடையில் அதிக பட்டன்கள் இருந்தன. இதனால் மாணவி தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு பணியில் இருந்த ஆசிரியை மாணவி உடையில் இருந்த பட்டன்களை கத்திரிக்கோல் கொண்டு அகற்றினார். இதனால் அந்த மாணவியால் அந்த உடையுடன் தேர்வறைக்கு செல்ல முடியாததால் அவர் பதற்றமடைந்து அழத் தொடங்கினார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் மணிமேகலை உடனடியாக அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச்சென்று வேறு ஆடை (டீ சர்ட்) வாங்கி அணியச் செய்து அழைத்து வந்தார். தொடர்ந்து மாணவி சோதனை செய்யப்பட்டு தேர்வு எழுத மையத்துக்கு சென்றார். மாணவி நீட் தேர்வு எழுத பெண் காவலர் செய்த உதவி பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 14 மையங்களில் நேற்று நீட் தேர்வு நடந்தது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி மோகன தனது பெற்றோருடன் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்தார்.
ஆனால், அவருக்கு அரசு கலைக்கல்லூரி மையத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மூன்று நிமிடத்திற்குள் மையத்திற்குள் சென்றாக வேண்டிய நெருக்கடியில் மாணவி தவித்தார். அவரது நிலை குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட அவர், போலீஸ் வாகனத்தில் மாணவி மற்றும் அவரது பெற்றோரை தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டரின் இந்த செயலுக்கு அங்கிருந்த பெற்றோர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மாணவியும் மற்றும் பெற்றோரும் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு நேற்று நடந்தது. கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு சவுரிபாளையத்தை சேர்ந்த மாணவன் ஆதர்ஷ் என்பவர் மதியம் 1.29 மணியளவில் வந்தார். மாணவன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து ேநரடியாக தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் ஹால்டிக்கெட் தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை.
ஆதார், புகைப்படம் கொண்டுவர மறந்தார். இதனால் அவரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர் பதற்றம் அடைந்தார். இந்த நிலையில் அங்கிருந்த சாய்பாபாகாலனி காவல் நிலைய தலைமை காவலர் பாபு மற்றும் பல்கலையின் செக்யூரிட்டி கலைவாணி ஆகியோர் மாணவன் தேர்வு எழுத செல்ல தேவையான ஆதார் அட்டை, புகைப்படங்களை அருகில் இருந்த கடைக்கு சென்று பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு வந்தனர். இதையடுத்து, மாணவர் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத சென்றார். மாணவனுக்கு சரியான நேரத்தில் ஓடிச்சென்று உதவி செய்த போலீசார், செக்யூரிட்டிக்கு அங்கிருந்த பலர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மதுரையில் 15 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
மதுரை நத்தம் சாலை அருகே திருப்பாலை பகுதியில் உள்ள யாதவர் கல்லூரி தேர்வு மையத்திற்கு 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்தனர். இதில் மாணவர் அமர்நாத் ஹால் டிக்கெட்டை மறந்து தேர்வு மையத்திற்கு வந்துவிட்டார். அவரை தடுத்து நிறுத்திய தேர்வு கண்காணிப்பாளர்கள் திருப்பி அனுப்பினர். செய்வதறியாது திகைத்து நின்ற மாணவரை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடல்நகர் பெண் போலீஸ் விஜயலெட்சுமி, உடனடியாக தனது செல்போனை கொடுத்து பெற்றோருடன் தொடர்பு கொள்ள செய்தார். அவர்கள் விரைந்து வந்து ஹால் டிக்கெட்டை கொடுத்ததும் மாணவர் தேர்வு எழுத உள்ளே சென்றார்.
The post தடுத்து நிறுத்தப்பட்ட மாணவர்கள்; உதவிய காக்கி கரங்கள் நீட் தேர்வில் போலீசாரின் மரிக்காத மனிதநேயம்: குவியும் பாராட்டு appeared first on Dinakaran.
