×

சென்னை தேனாம்பேட்டை மைதானத்தில் 34 ஆண்டுக்கு பிறகு இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்: முன்னணி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: தேனாம்பேட்டை மைதானத்தில் 34 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கம் அருகே காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான மிகப்பெரிய மைதானம் உள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி வரை மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் இந்த மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் உரையாற்றி இருக்கிறார்கள்.

காங்கிரஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஏற்பாடு செய்து வருகின்றனர். இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹேக்டே, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்காபாலு, திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். மாநாட்டிற்கு, சுமார் 25 ஆயிரம் பேர் வருவார்கள் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் கூறியதாவது: காங்கிரஸ் மைதானத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்கூட்டம் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி புது எழுச்சி பெற்று வருகிறது. அதற்கு இந்த மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும். கிராம கமிட்டி அமைத்ததில் புத்துயிர் பெற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சியினர் வருகிறார்கள்.

எங்கள் மாவட்டம் சார்பில் 100 வேனில் தொண்டர்களை அழைத்து வருகிறோம். தேசப்பற்றை பறைசாற்றும் வகையில், தென்சென்னை காங்கிரஸ் கலை பிரிவு சார்பில் அதன் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் இன்னிசை நடன நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை தேனாம்பேட்டை மைதானத்தில் 34 ஆண்டுக்கு பிறகு இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்: முன்னணி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Teynampet stadium ,Chennai ,Congress party ,Kamaraj Arangam ,Teynampet ,Anna Salai, Chennai ,Jawaharlal Nehru ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...