×

ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமிக்கலாம் என்ற தீர்ப்பை பெற்றுத் தந்த முதல்வருக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் பாராட்டு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சுயநிதி கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர்; பாராட்டு விழா என்று யாராவது கேட்டால் நான் நேரம் அளிக்க மாட்டேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்ற காரணத்தால்தான் பாராட்டு விழாவுக்கு நேரம் வழங்கினேன். நீங்கள் பொழிந்த அன்பில் நான் திக்குமுக்காடி விட்டேன். மாநில சுயாட்சி நாயகர் என விழா அழைப்பிதழில் போட்டுள்ளனர்; அது நான் இல்லை; தமிழ்நாட்டு மக்கள்தான்.திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்.

இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஏஜென்ட்டாக உள்ள ஆளுநர், திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு மூலம் பூனைக்கு மணி கட்டியுள்ளனர். ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது மிகப்பெரிய வெற்றி. ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் தாங்கிக் கொள்வாரா? எந்தக் காலத்திலும் உரிமையை விட்டுத் தர மாட்டோம். தீர்ப்பு தந்துள்ள நம்பிக்கையோடு மாநில சுயாட்சியை மீட்டெடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. தமிழ்நாடு இளைஞர்கள் சிறந்த வேலைவாய்ப்பு பெற பாடுபடுகிறோம்.  பகுத்தறிவுக்கான எதிரான மூட நம்பிக்கைகளை பரப்பும் இடமாக கல்வி நிறுவனங்கள் இருக்கக் கூடாது.

பகுத்தறிவுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை பரப்பும் செயலில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லாவற்றுக்கும் கல்வி தான் அடிப்படை. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள். சமூக வலைதளங்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண வேண்டாம். எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம் என்று கூறினார்.

The post ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai Nehru Inner Sports Arena ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...