×

முன்னணி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தாமல் பாஜவுடன் கூட்டணி அறிவிப்புக்கு பின் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடக்கிறது

சென்னை: கட்சியின் முன்னணி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தாமல் பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.மே 2ம் தேதி (இன்று) அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 வாரத்துக்கு முன் அறிவித்தார். இந்த கூட்டத்தில் பாஜவுடன் மீண்டும் அதிமுக ஏன் கூட்டணி வைத்துள்ளது என்பது குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

கடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக – பாஜவுடன் இனி கூட்டணி கிடையாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனியாகவும், பாஜ தனியாகவும் நின்று தேர்தலை சந்தித்தன. இந்த நிலையில், அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் 2ம் கட்ட தலைவர்களிடம் கருத்து கேட்காமல் மற்றும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டாமல் பாஜ கூட்டணி தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமி அறிவித்ததால் அதிமுக நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற உச்சக்கட்ட குழப்பத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (2ம் தேதி) மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கிறது.

 

The post முன்னணி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தாமல் பாஜவுடன் கூட்டணி அறிவிப்புக்கு பின் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Royapettah ,Chennai ,general secretary ,Edappadi Palaniswami ,committee ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...