×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி!!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார்.பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை கண்டு ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். மே 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 7ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ம் தேதி நடக்கிறது. மே 9ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து மே 10ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

இத்திருவிழாவின் இணைப்பாக நடைபெறும் அழகர் கோயில் திருவிழா மே 8ம் தேதி தொடங்குகிறது. மே 10ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ம் தேதி அழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 12ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. மே 13ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், மே 14ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும். சித்திரைத் திருவிழா துவங்குவதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple Chithirai Festival ,Vaigai River ,Madurai ,Aglagar ,Meenakshi Amman Temple ,Madurai… ,Dinakaran ,
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...