×

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் சேதமானதால் கிராம மக்கள் பாதிப்பு: அதிகாரிகள் சீரமைத்து தர வலியுறுத்தல்


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலத்தால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்தை உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே உள்ள ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம் மழை வெள்ள காலங்களில் மூழ்கி அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ரூ.27 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. புது மேம்பாலப் பணி தொடங்கியதால் வாகன போக்குவரத்துக்காக தற்காலிகமாக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலம் மழைக்கு சேதமடைந்து இரண்டு இடங்களில் துண்டாக உடைந்தது. இதனால் தற்காலிகமாக பாலம் விரைந்து சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

பின்னர், ஒரு வழியாக மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தது. பின்னர் மேம்பாலம் திறக்கப்பட்டு, அதில் தற்போது போக்குவரத்தும் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், சேதம் அடைந்த மாற்று தரைப்பாலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை சீரமைத்து கொடுத்தால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். இதுசம்பந்தமாக மேம்பாலம் கட்டும்போதே ஒப்பந்ததாரர்களிடம் கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்கள் தரைப்பாலத்தை சீரமைப்பதாக கூறிவிட்டு கடைசிவரை சீரமைக்காமல் சென்றுவிட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேம்பாலம் அமைப்பதற்காக அதன் அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

அந்த தற்காலிக பாலம் கடந்த வருடம் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உடைந்தது. அந்த பாலத்தை சீரமைத்து கொடுத்தால் அனந்தேரி, பேரிட்டிவாக்கம் போன்ற பல கிராம மக்கள் பயன் பெறுவோம். தற்போது தரைப்பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அனந்தேரி கிராம சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அனந்தேரியில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் மக்கள் புதிய பாலத்தின் மறுமுனைக்குச் சென்று திரும்பும் இடத்தில் மிகவும் ஆபத்தான முறையில் செல்லவேண்டியுள்ளது. இங்கு இதுவரை 20க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. எனவே ஆரணி ஆற்றில் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் சேதமானதால் கிராம மக்கள் பாதிப்பு: அதிகாரிகள் சீரமைத்து தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Uthukkottai Arani river ,Uthukkottai ,Uthukkottai Arani bridge ,Thiruvallur… ,Dinakaran ,
× RELATED என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா...