×

தமிழ்நாட்டில் மதவாதம் ஒருபோதும் நுழைய முடியாது : பாஜ எம்எல்ஏவுக்கு முதல்வர் பதில்

சென்னை: தமிழ்நாட்டில் மதவாதம் ஒருபோதும் நுழைய முடியாது என பாஜ எம்எல்ஏவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு ஒவ்வொரு நாளும், பல்வேறு விதமான குற்றச் செயல்கள் நடக்கிறது என்றார். அமைச்சர் எஸ்.ரகுபதி: இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கக் கூடிய மக்களைவிட, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். இன்றைக்கு பல வட மாநிலங்களுக்குச் சென்றால் என்ன நடக்கிறது என்பது உறுப்பினருக்கு நன்றாக தெரியும். இந்தியாவிலேயே சுதந்திரமாக மக்கள் நடமாடுகிற மாநிலம் தமிழ்நாடுதான். வானதி சீனிவாசன்: இதை நான் மகிழ்ச்சியோடு ஆமோதிக்கிறேன். ஆனால், தமிழகம் எப்படிப்பட்ட மாநிலம். மற்ற வட இந்திய மாநிலங்களோடு நாம் ஒப்பீடு செய்யவே கூடாது.

அவை முன்னவர் துரைமுருகன்: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார். வாரணாசியில் மே 6ம் நாள் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்திருக்கிறார்கள். பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆகையினால், எங்கேயும், எல்லா இடங்களிலும் மொத்த பேரும் நல்லவனாக இருக்க மாட்டார்கள். எங்கேயாவது ஒன்றிரண்டு பேர் கெட்டவனாக இருப்பார்கள். அந்த கெட்டவன் எல்லோருடைய ஆட்சியிலும் இருக்கிறான். ஏன் ராமாயணத்திலேயே பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான். எனவே, அதற்கு நடவடிக்கை எடுத்தார்களா என்று தான் பார்க்க வேண்டும். நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அமைச்சர் கீதா ஜீவன்: பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத்தான் இருக்கிறது. இதேபோன்று, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மத ரீதியான செயல்பாடுகள் பற்றியும் வானதி சீனிவாசன் தொடர்ந்து பேசினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதவாத, மத எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக உறுப்பினர் பேசுகிறார். எங்கிருக்கிறது, எப்படியிருக்கிறது, எந்தச் சூழ்நிலையில் இருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொன்னால், அதற்கு விளக்கம் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக பேச கூடாது. ஆடிட்டர் ரமேஷ் தொடர்பான கொலை பற்றி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்தக் கொலை என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது. அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காஷ்மீரில் நடைபெற்றது போன்று தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டு பேசி உள்ளார். அதுமாதிரி நிச்சயமாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடைபெறவே நடைபெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் சம்பவத்திலேகூட நாங்கள் பேசும்போது, ஒன்றிய அரசினுடைய பாதுகாப்பு குறைபாடு பற்றி இதுவரை நாங்கள் பேசவில்லை.

ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றுதான் தெரிவித்தோம். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவாதம், உள்ளே நுழைய முடியாது. அதனை அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் தெளிவோடு சொல்கிறேன். அதேபோன்று, பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதி என்ன ஆனது, அதற்கு ஒன்றிய அரசின் நிதியை நீங்கள் உரிமையோடு குரல் கொடுத்து பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வானதி சீனிவாசன்: தமிழகத்தினுடைய நன்மைக்காக, நாங்களும் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். உதவி செய்யவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

 

The post தமிழ்நாட்டில் மதவாதம் ஒருபோதும் நுழைய முடியாது : பாஜ எம்எல்ஏவுக்கு முதல்வர் பதில் appeared first on Dinakaran.

Tags : Nadu ,CM ,BJP MLA ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Coimbatore ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...