×

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் பெருமாள் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் பெருமாள் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் இக்கோயிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையினர் சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தனர். மேலும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் மற்றும் முதல்நிலை வரலாற்று மாணவர்களும் ஆய்வு செய்தனர். இது பற்றி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் கூறுகையில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120), விக்கிரமச்சோழன் (1118-1135), இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133-1150) ஆகிய சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவையாவும் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்ததால் மறைந்து இருந்தது. தற்போது வண்ணத்தை நீக்கி கல்வெட்டை கண்டறிந்துள்ளோம். இக்கல்வெட்டுகள் முழுமை பெறவில்லை, எனினும் கங்கைகொண்ட சோழ வளநாட்டு பனையூர் நாட்டு ஆனாங்கூர் என்று இவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கோயில் கருவறையின் உள்ளே 14ம் நூற்றாண்டை சேர்ந்த மூலவர் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இக்கோயிலின் வடக்குபுற சுவரில் 38 அடி நீளம் கொண்ட பெரிய அளவுகோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் கரத்து அளவுகோல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வூரில் பல்லவர்கால சிவன் கோயில் இருந்ததை மூன்றாம் நந்திவர்மனுடைய கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் பல்லவர்கால அரிய முருகன் சிற்பம் ஒன்றும் இவ்வூரில் உள்ளது. ஆனாங்கூர் பல்லவர் காலம் முதல் சோழர் காலம்வரை வரலாற்று சிறப்புமிக்க ஊராக திகழ்ந்தது தற்போது தெரியவந்துள்ளது. இக்கோயில் தற்போது சேதமடைந்து வருகிறது, என்றார். களஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன் உடனிருந்தார்….

The post விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் பெருமாள் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Chola ,Perumal temple ,Anangur village ,Villupuram ,Anangur Perumal Temple ,Villupuram… ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...