×

க்யூட் நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம்: மாணவர்கள் கவலை

சென்னை: க்யூட் தேர்வுக்கான அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர். ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான க்யூட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை மூலம் 37 பாடங்களுக்கு இத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த க்யூட் தேர்வை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் க்யூட் தேர்வை எழுத தகுதியானவர்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களில் அதிகபடியாக 5 பாடங்கள் வரை தேர்வு செய்யலாம்.

அந்த வகையில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி மார்ச் 1 முதல் தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாண்டிசேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளில் சேர க்யூட் தேர்வு கட்டாயமாகும். இதற்கான தேர்வை உத்தேசமாக மே 8ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடத்த திட்டமிட்ட நிலையில், தேர்விற்கான அட்டவணை தற்போது வரை வெளியாகவில்லை. இதனிடையே மே 4ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால், அட்டவணை தாமதமாவது மாணவர்களிடையே எதிர்பார்ப்பையும், கவலையையும் அதிகரித்து உள்ளது.

 

The post க்யூட் நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியாவதில் தாமதம்: மாணவர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Testing Agency ,NCERT… ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை