×

கடந்த 4 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது: காவல்துறை தகவல்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னையில் சட்டம், ஒழுங்கை காப்பதிலும், முறையான ரோந்து கண்காணிப்பு பணி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்து, நீதிமன்றங்களில் ஆஜர் செய்யவும், நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் பெற்று தரவும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரவுடிகள், முக்கிய ரவுடிகள், திருட்டில் ஈடுபடுகிறவர்கள், போதைப் பொருள் கடத்தல் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி படை பிரிவுகள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி உளவுப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொலை, ஆதாய கொலை, போக்கிரிகள் பழிவாங்கும் கொலைகள், கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுப்பதை முதன்மையாக கருத்தில் கொண்டு, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தும், முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொண்டும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 2021ம் ஆண்டு 94 கொலை வழக்குகளும், 2022ல் 97 கொலை வழக்குகளும், 2023ம் ஆண்டு 102 கொலை வழக்குகளும், 2024ம் ஆண்டு 102 கொலை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. 2025ம் ஆண்டு ஏப்ரல் வரை 29 கொலை வழக்குகள் தாக்கலாகியும் அதில் 3 போக்கிரி கொலை குற்றங்கள் மட்டுமே நடந்துள்ளது. உரிய நடவடிக்கை மூலம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. கொள்ளை வழக்குகளில் 2021ல் 15 வழக்குகளும், 2022ல் 11 வழக்குகளும், 2023ல் 17 வழக்குகளும், 2024ல் 13 வழக்குகளும் தாக்கலாகியுள்ள நிலையில், 2025ம் ஆண்டு 1 வழக்கு மட்டுமே தாக்கலாகியுள்ளது. உரிய நடவடிக்கை மூலம் கொள்ளை குற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல வழிப்பறி வழக்குகளில் 2021ல் 392 வழக்குகளும், 2022ல் 405 வழக்குகளும், 2023ல் 325 வழக்குகளும், 2024ல் 258 வழக்குகள் தாக்கலாகியுள்ள நிலையில், 2025ல் 51 வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் வழிப்பறி நிகழ்வு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 2021ல் 416 வழக்குகளும், 2022, 2023, 2024 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கலான நிலையில், 2025ல் இதுவரை 326 வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு துணை ஆணையர் தலைமையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வழக்குகளில் தொடர்ச்சியாக சாட்சிகளையும், எதிரிகளையும் ஆஜர்படுத்தி முக்கியத்துவம் தந்து அதனால் பல வழக்குகளில் நீதிமன்றங்களில் தண்டனை உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னை காவல் சரகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் அனைத்தும் முறையாக புகார்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுத்து நீதிமன்ற தண்டனை பெற்று தரும் முயற்சி தொடர்வதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் துறையை எளிதில் அணுகி புகார்கள் தெரிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் காவல் ஆணையர் உத்தரவின்படி, சென்னை காவல், சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகுந்த ஒருங்கிணைப்பு செய்வதற்காக, நுண்ணறிவுப்பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு, குற்றவாளிகளின் வலையமைப்பை தொடர்ந்து கண்காணித்து, முக்கிய குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை கண்காணித்து, சட்ட நடவடிக்கைகள் எடுத்து வரப்படுவதால் குற்றங்கள் குறைந்துள்ளன.

The post கடந்த 4 ஆண்டுகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Arun ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...