சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: முதன்முதலாக, இந்திய அரசியல் சட்டத்தில் கவர்னர், சட்டமன்றம் நிறைவேற்றிய அந்த தீர்மானத்தை கையெழுத்து போடலாமா, இல்லை வேண்டாமா என்று உச்ச நீதிமன்றத்தினை நாடிய முதல் முதலமைச்சர் இந்தியாவிலேயே தளபதி ஒருவர் தான். பிறகு அரசியலமைப்பில் கொண்டுவந்து, இனி கவர்னர், கோப்புகள் வந்தால் தேக்கி வைக்கக்கூடாது, அதை அனுப்ப வேண்டும். ஒருகால், அதில் சில திருத்தம் கொடுக்கும்நேர்வில், அதை மறுபடியும் நிறைவேற்றி அனுப்பினால் கையெழுத்துப் போட வேண்டும்.
அதில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட வேண்டுமென்று தலையிலே கொட்டி எல்லா கவர்னர்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தியாவில் நம்முடைய முதல்வர் உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்தியப் பெருமையை நிலைநாட்டியிருக்கிறார். இவர் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். நான் பார்த்து வளர்ந்த பிள்ளை என்பதால், இந்த மன்றத்திலேயே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டுமென்று ஆசை. காரணம், உட்கார்ந்த இடத்திலேயே, நான்காண்டுக் காலத்திற்குள்ளாக, அகில இந்தியாவே பெருமைப்படும் வகையில் மற்றொரு அரசியலமைப்பு திருத்தம் வரவிருக்கிறது. அந்த நிலையைக் கொண்டுவந்தவர் என்று நாளை வரலாற்றில் எழுதுவார்கள். இதைக் கொண்டுவந்தவர் யார் என்று கேட்டால், தளபதி மு.க.ஸ்டாலின் என்று வரலாற்றில் எழுதுவார்கள். ஆகையினால், அவருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
The post உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்திய பெருமையை நிலைநாட்டியிருக்கிறார் முதல்வருக்கு மன்றத்திலேயே முத்தம் கொடுக்க ஆசை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.
