போடி, ஏப். 26: போடி அருகே பட்டப்பகலில் பூட்டை உடைத்து வயதான தம்பதி வீட்டில் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (65). இவரது மனைவி ராஜகுமாரி (60). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்தன், மகள் ஜெயமாலா. இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று முன் தினம் காலை கருத்தப்பாண்டி வெளியே சென்றுவிட்டார். வீட்டை பூட்டி விட்டு ராஜகுமாரி வேலைக்கு சென்றார். பிற்பகல் 3 மணிக்கு ராஜகுமாரி வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் தங்க நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா போலீசில் ராஜகுமாரி புகார் செய்தார். எஸ்ஐ விஜய் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். தேனியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பூட்டை உடைத்து வயதான தம்பதி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post போடி அருகே வயதான தம்பதி வீட்டில் 6 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.
