×

கோடை வெயிலால் வறண்டு வரும் நீர்நிலைகள் தண்ணீருக்காக வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகும் அபாயம்

*குட்டைகள் ஏற்படுத்த வன ஆர்வலர்கள் வலியுறுத்தல்

செங்கோட்டை : வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, செழிப்பான மலைப்பிரதேசங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் கூட தற்போது வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் வறண்டு வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. ஏராளமான நீர்நிலைகள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்ட நிலையில் காணப்படுவதால் மலைப்பகுதியில் வாழும் யானை, மான், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. மேலும் அவைகள் தண்ணீருக்காக ஊருக்குள் புகும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று பட்டப்பகலில் மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் நீர்தேக்கத்தில் தண்ணீர் தேடி 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மற்றும் காட்டெருமைகள் வந்து தண்ணீர் குடித்தன.

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வருவதால், வனவிலங்குகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதிகளுக்குள் வசதியினை வனத்துறையினர் காட்டுக்குள் குட்டைகள் அமைத்து ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவை ஊருக்குள் புகும் வாய்ப்புள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கோடை வெயிலால் வறண்டு வரும் நீர்நிலைகள் தண்ணீருக்காக வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...