×

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 27 முதல் ரத்து: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை!!

டெல்லி: பஹல்காம் தாக்குதல் எதிரொலி காரணமாக பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 27 முதல் ரத்து செய்யப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் மீது அதிரடியான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்தது.

அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து SVES விசாக்களின் கீழ் இந்தியா வருவோருக்கு அனுமதி இல்லை என்றும் அந்த விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படவும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.

தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து எல்லைகளில் பாகிஸ்தானியர் கொத்து கொத்தாக இந்தியாவை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவில் வாழும் பாகிஸ்தானியர்களின் விசாக்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போது திருத்தப்பட்டுள்ளபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசாக்கள் காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பஹல்காம் தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏப்ரல் 27 முதல் ரத்து: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Echoes of ,Pahalgam ,Ministry of External Affairs ,Delhi ,Pakistanis ,of ,Pahalgam attack ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி