×

பழநி கோயிலுக்கு எடப்பாடி பக்தர்கள் வருகை: 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி மும்முரம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவிற்கு வருகை தரும் பிரசித்தி பெற்ற காவடி குழுக்களில் சேலம் மாவட்டம், எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல தைப்பூச காவடிகள் ஒன்றாகும். 362 ஆண்டுகளுக்கும் மேலாக இக்காவடி குழுவினர் பழநி கோயிலுக்கு வருகின்றனர். இக்குழுவினருக்கு மட்டுமே இரவு நேரமும் பழநி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. தைப்பூசம் முடிந்த பின்னரே இக்குழுவினர் பழநி கோயிலை வந்தடைவர். இக்குழுவினர் நேற்று நள்ளிரவு மானூர் ஆற்றங்கரைக்கு வந்தனர். இன்று காலை சண்முகநதி ஆற்றங்கரையில் குளித்து முடித்து விட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக கிளம்புவர். சண்முகநதியில் குளித்து முடித்த பின் சிவப்பு, மஞ்சள், நீல நிற குடைகளை ஏந்தி மயில், இளநீர் காவடிகளுடன் காவிநிற ஆடை அணிந்து கோயிலை வந்தடைவர். சாயரட்சை, ராக்கால பூஜைகளில் பங்கேற்று இன்றிரவு மலைக்கோயிலிலேயே தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர். கொரோனா காரணமாக இம்முறை மலைக்கோயிலில் 500 பேர் மட்டுமே தங்குமாறு கோயில் நிர்வாகத்தால் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பகுதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களுக்காக இவர்களது குழுவினரே அடிவார பகுதியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பக்தர்கள் ஊருக்கு திரும்பி செல்ல சேலம் மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயில் நிர்வாகம் சார்பில் சண்முகநதி ஆற்று பகுதியில் முடி காணிக்கை, கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எடப்பாடியை சேர்ந்த பக்தர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘எங்களுக்கு மட்டுமே பழநி மலைக்கோயிலில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி உள்ளது. எங்களது குழுவினருக்காக நாங்களே பஞ்சாமிர்தம் தயாரித்து கொள்வோம். சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 10 டன் வாழைப்பழம், 30 கிலோ எடை கொண்ட 250 சர்க்கரை முட்டைகள், 50 பேரீட்சை மூட்டைகள், 20 தேன் டின்கள், 20 நெய் டின்கள், 20 கற்கண்டு மூட்டைகள், 15 கிலோ ஏலக்காய் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது’’ என்றார்….

The post பழநி கோயிலுக்கு எடப்பாடி பக்தர்கள் வருகை: 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Palani Temple ,Palani ,Dindigul district ,Palani Dandayuthapani Swamy Temple ,Thaipusa festival ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்