*டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி குடிக்கும் குடிமகன்கள், காலி பாட்டில்களை பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் வீசி விட்டு செல்கின்றனர். இதனை தடுக்க, டாஸ்மாக் கடையை இடம் மாற்ற செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி தாலுகா, பாரூர் பெரியஏரியில் இருந்து, கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் 2ம் போக சாகுபடிக்காக, கடந்த டிசம்பர் 12ம்தேதி முதல் ஏப்ரல் 20ம்தேதி வரை, 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கிழக்கு கால்வாய் மூலம், செட்டியூர் வழியாக பனங்காட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.
இதனால், சிறு விவசாயிகள் காய்கறிகள் மற்றும் மலர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். பனங்காட்டூர் செட்டியூர் என்னும் இடத்தில், தண்ணீர் செல்லும் பாசன கால்வாய் ஓரம், அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி சென்று, கால்வாய் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தண்ணீர் செல்லும் பகுதிகளில் அமர்ந்து மது குடித்து விட்டு, காலி பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் கப்களை கால்வாயில் வீசி விட்டு செல்கின்றனர்.
இதனால் கால்வாய் முழுவதும், காலி மதுபாட்டில்கள் உடைந்து கிடக்கிறது. இந்த கழிவுகள் விவசாய நிலங்களுக்கு செல்வதால், விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும், கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
The post பாரூர் அருகே குடித்து விட்டு காலி மது பாட்டில்களை பாசன கால்வாயில் வீசும் குடிமகன்கள் appeared first on Dinakaran.
